Powered By Blogger

Sunday, March 10, 2024

மாறிய இயக்குநர்…, டப்பிங் பேச மறுத்த ஜனகராஜ் – குணா ரகசியங்கள்!

 


 மஞ்சுமல் பாய்ஸ்படத்தின் வெற்றிக்கு பிறகு, கமல் நடித்த குணா திரைப்படம் ரசிகர்களிடையே மீண்டும் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த சூழலில் குணா திரைப்படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், இயக்குநருமான ராசி. அழகப்பன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய  படங்களின் கமர்ஷியல் வெற்றிக்குப் பிறகு, வித்தியாசமான ஒரு கலைப் படத்தை எடுக்க கமல் விரும்பினார். இதற்கான முயற்சியின் விளைவுதான் குணா திரைப்படம். இப்படத்துக்காக கமல் உடல் எடையைக் குறைப்பது, உடல் நிறத்தை குறைப்பது என பல மாற்றங்களைச் செய்தார்.

குணா திரைப்படத்தை முதலில் மலையாள இயக்குநரான சிபி மலையில்தான் இயக்குவதாக இருந்தது. இப்படத்தின் கதை விவாதங்கள் மற்றும் லொகேஷன் தேடும் பணிகளில் ஆரம்ப காலத்தில் இவரும் கமலுடன் பணியாற்றினார். ஆனால் பிறகு சில காரணங்களால் குணா படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அதிலிருந்து விலகினார்.

 

குணா திரைப்படத்தின் படப்பிடிப்பை முதலில் குணசீலம் பகுதியில்தான் நடத்துவதாக  இருந்தது. ஆனால் குளுமையான பகுதியில் படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த கமல், கொடைக்கானலில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டார்.

இயக்குநர் ராசி அழகப்பன், சந்தான பாரதியின் சகோதரரும் நடிகருமான சிவாஜி ஆகிய 2 பேர் மட்டுமே இப்படத்தின் உதவி இயக்குநர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.

குணா படத்தில் சிபிஐ அதிகாரியாக முக்கிய வேடத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்துள்ளார். அவருக்கு சுவாசப் பிரச்சினை இருந்தது. அதனால் மலைப் பகுதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்பது கடினம் என்று கமலிடம் எஸ்.பி.பி கூறியிருந்தார். ஆனால் எஸ்.பி.பிதான் இந்த வேடத்தில் நடிக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த கமல், அதில் எஸ்.பி.பியின் கதாபாத்திரத்துக்கும் சுவாசப் பிரச்சினை இருப்பதுபோல் கதையை அமைத்தார்.

 

குணா குகைக்கு டெவில்ஸ் கிச்சன் என்பதுதான் முன்பு பெயராக இருந்தது. ஆபத்தான அந்த பகுதியில் விழுந்தால் உயிருக்கே ஆபத்து என்று கமலிடம் அந்த இடத்தைக் காட்டிய ஜோசப் என்ற வழிகாட்டி  எச்சரித்துள்ளார். ஆனால் கமல் அந்த இடத்தில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். படப்பிடிப்பு குழுவினரில் அந்த குகைக்குள் முதலில் இறங்கியவர் கமல்ஹாசன்.

இப்படத்தின் ஷூட்டிங்கின்போது சண்டைப்  பயிற்சியாளர் விக்ரம் தர்மாவின் குழுவைச் சேர்ந்த 10 சண்டைப் பயிற்சியாளர்களை கமல் உடன் வைத்திருந்தார். குணா குகையின் மீது ஒரு ராட்டிணத்தைப் பொருதி, படக்குழுவினரை குகைக்குள் கொண்டுசெல்லும் முயற்சிக்கு அவர்கள்தான் உதவியாக இருந்திருக்கிறார்கள்.

குகைக்குள் படப்பிடிப்பு நடக்கும்போது உள்ளே இருப்பவர்கள் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். வேகவைத்த சிக்கன் துண்டுகள் மற்றும் பிஸ்கெட்களை மட்டுமே அவர்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள்.

 

குணா படத்தின் டப்பிங்கின்போது ஜனகராஜுக்கும் இயக்குநர் சந்தான பாரதிசிவாஜி சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பிறகு அது கைகலப்பில் முடிந்துள்ளது. அதனால் படத்தின் டப்பிங்குக்கு வர ஜனகராஜ் மறுத்துள்ளார். இயக்குநர்கள் சங்கம் வரை இப்பிரச்சினை சென்றிருக்கிறது. பிறகுதான் ஜனகராஜ் டப்பிங் பேசியிருக்கிறார். இந்த சம்பவத்துக்கு பிறகு ஜனகராஜை தனது திரைப்படங்களில் நடிக்கவைப்பதை கமல்ஹாசன் தவிர்த்தார். ஜனகராஜின் சினிமா வாழ்க்கையில் சரிவு ஏற்பட தொடங்கியது.

 

குணா படம் வெளியான அதே காலகட்டத்தில் ரஜினி நடித்த தளபதி படம் வெளியானது. அப்போதைய சூழலில் தளபதி ஹிட் அடிக்க, குணா வசூலில் சொதப்பியது. ஆனால் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைக்காவிட்டாலும், விமர்சன ரீதியாக குணா நல்ல பெயர் வாங்கியது. 

 

சிவக்குமார் வேடத்தில் நடித்த ரவிச்சந்திரன் – காதலிக்க நேரமில்லை 60

 


 காதலிக்க நேரமில்லைபடம் வெளியாகி கடந்த 24-ம் தேதியுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இப்படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அதன் வசனகர்த்தாவான சித்ராலயா கோபுவின் மகன் சித்ராலயா ஸ்ரீராம்வாவ் தமிழாவுக்காக பகிர்ந்துகொள்கிறார்

மாற்றத்தை விரும்பிய ஸ்ரீதர்:

1963-ல்நெஞ்சம் மறப்பதில்லைஎன்ற சீரியஸான காதல் கதையை  இயக்கிய ஸ்ரீதர், கொஞ்சம் மாறுதலுக்காக அடுத்த படத்தை காமெடி படமாக இயக்க திட்டமிட்டுள்ளார். இதுபற்றி தனது நண்பர் சித்ராலயா கோபுவிடம் கூறியிருக்கிறார். ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தில் தங்கவேலுவை வைத்து காமெடி டிராக்கை எழுதிய கோபுவும் இதற்கு சம்மதிக்க, மெரினா கடற்கரையில் அமர்ந்து உருவாக்கியதுதான் காதலிக்க நேரமில்லை படத்தின் கதை.

சிவக்குமாருக்கு பதில் ரவிச்சந்திரன்:

 காதலிக்க நேரமில்லைபடத்தில் ரவிச்சந்திரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சிவக்குமார்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் ஒரு சில காரணங்களுக்காக அவருக்கு பதில் அந்த பாத்திரத்தில் புதுமுக நடிகரான ரவிச்சந்திரன் நடித்தார்.

தாதா மிராஸியின் தாக்கம்:

காதலிக்க நேரமில்லைபடத்தின் ஹைலைட்டே பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் காட்சிதான். இந்த காட்சிக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் இயக்குநர் தாதா மிராஸி.  புதிய பறவைஉள்ளிட்ட பல படங்களை இயக்கிய தாதா மிராஸி, கதை சொல்லும்போது தத்ரூபமாக நடித்துக் காட்டுவார். அவரை இமிடேட் செய்து ஒரு காட்சி வைத்தால் நன்றாக இருக்குமே என்று சித்ராலயா கோபுவிடம் இயக்குநர் ஸ்ரீதர் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர்கள் செய்த டிஸ்கஷனுக்கு பிறகு நாகேஷ் கதை சொல்லும் சீன் உருவாகி இருக்கிறது.

நடிக்க மறுத்த சச்சு:

நடிகை சச்சு காமெடி கேரக்டரில் நடித்த முதல் படம்காதலிக்க நேரமில்லை’. முதலில் இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க சச்சு தயங்கியிருக்கிறார். பின்னர் இயக்குநர் ஸ்ரீதர், ‘இப்படத்தில் என்னைப் பொறுத்தவரை 3 நாயகர்கள், 3 நாயகிகள். நாகேஷ்சச்சு கதாபாத்திரங்களையும் நாயகன் நாயகியாகத்தான் பார்க்கிறேன். இப்படத்தில் நாயகன் நாயகியைவிட சச்சு பாத்திரத்துக்குதான் மாடர்னாக ஒரு நடனக் காட்சி இருக்கிறது என்று சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

ஆழியாறு கெஸ்ட் ஹவுஸ்:

காதலிக்க நேரமில்லை படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆழியாறு கெஸ்ட் ஹவுஸில் படமாக்கப் பட்டுள்ளது. இந்த பட்த்தில் நடித்த பலரும் அப்போது அங்கேயே தங்கி இருந்துள்ளனர். இந்த இட்த்தை நேரில் பார்த்து இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி எம்.எஸ்.வியை அங்கே அழைத்துச் சென்றிருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீதர். இப்பட்த்தின் சில பாடல்களை அங்கேயே இருந்து கம்போஸ் செய்திருக்கிறார் எம்.எஸ்.வி.

ஒரு காட்சியில் நடித்த சங்கர் கணேஷ்:

இந்தப் படத்தில் எம்.எஸ்.வியிடம் உதவியாளராக சங்கர் கணேஷ் இரட்டையர்கள் பணியாற்றி உள்ளனர். அவர்கள் இருவரும் இப்படத்தில் இசையமைப்பாளர்களாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்கள்.

சீரியஸான பாலையா, நாகேஷ்:

காதலிக்க நேரமில்லை படத்தில் அனைவரையும் சிரிக்கவைத்த பாலையாவும், நாகேஷும் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் சீரியஸாக இருப்பார்களாம். நாகேஷின் பேச்சு த்த்துவங்கள் நிறைந்ததாக இருக்குமாம். 1964-ம் ஆண்டு காதலிக்க நேரமில்லை படம் வெளியான பிறகுதான் நாகேஷின் மார்க்கெட் உச்சத்துக்கு போனது.

  வெண்ணிற ஆடை நிர்மலா:

இப்படத்தில் நாயகிகளில் ஒருவராக வெண்ணிற ஆடை நிர்மலா முதலில் ஒப்பந்தமாகி இருந்தார். சில நாட்கள் அவர் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். ஆனால் பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.