கடல் அலைகளைப் போலத்தான் சில சாதனை மனிதர்களும். சிறிதுநேரம்கூட ஓய்வெடுக்க மாட்டார்கள். புதிது புதிதாக சாதனைகளைப் படைக்க தொடர்ந்து தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட சாதனை மனிதர்களில் ஒருவர், ‘பையோளி எக்ஸ்பிரஸ்’ என்று இந்தியர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் தங்க மங்கை பி.டி.உஷா.
சர்வதேச தடகள வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்த பிடி.டி.உஷா, ஆசிய போட்டிகள் உட்பட சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக வாங்கிக் குவித்த பதக்கங்கள் ஏராளம். 1979-ம் ஆண்டுமுதல் இந்தியாவுக்காக பல போட்டிகளில் ஓடி சாதனை படைத்த உஷா, 2000-ம் ஆண்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் உஷாவின் மனம் அவரை ஓய்வெடுக்க விடவில்லை. ‘எத்தனை பதக்கங்கள் வென்றால் என்ன, இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலப் பதக்கத்தைக்கூட பெற முடியவில்லையே’ என்ற ஏக்கம் அவரது இதயத்தைக் கிழித்துக்கொண்டிருந்தது. 1984-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் நூலிழையில் (நூறில் ஒரு பங்கு விநாடியில்) வெண்கலப் பதக்கத்தை இழந்த ஏக்கம் பல நாட்கள் அவரைத் தூங்க விடாமல் செய்தன.
இப்படி பல நாட்கள் சென்ற நிலையில்தான் மின்னலாய் அவருக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. ‘ஒலிம்பிக்கில் நம்மால் பதக்கம் வாங்கித்தர முடியாவிட்டால் என்ன. அப்படி பதக்கம் வாங்கித் தரக்கூடிய புதிய வீராங்கனைகளை உருவாக்குவோம்’ என்பதே அந்த எண்ணம். உடனடியாக அந்த எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கினார். அப்படி உருவானதுதான் ‘உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்ஸ்’. 2002-ம் ஆண்டில் கொயிலாண்டியில் மிகச்சிறிய வாடகைக் கட்டிடத்தில் தொடங்கிய இந்த பள்ளி, இன்று கோழிக்கோடை அடுத்துள்ள கினலூரில் 30 ஏக்கர் இடம், சிந்தடிக் டிராக், உலகத் தரம்வாய்ந்த உடற்பயிற்சிக் கூடம் என்று மாநில அரசு மற்றும் பொதுமக்களின் உதவியால் வளர்ந்து நிற்கிறது. அதுமட்டுமல்ல, கடந்த 15 ஆண்டுகளில் பிரபல ஓட்ட வீராங்கனை டிண்டு லுகா உட்பட உட்பட 8 சர்வதேச வீராங்கனைகளை இந்தியாவுக்கு இப்பள்ளி அளித்துள்ளது. உஷாவின் இந்த பயிற்சிப் பட்டறையில் உருவான வீராங்கனைகள், சர்வதேச போட்டிகளில் இதுவரை 61 பதக்கங்களை இந்தியாவுக்காக வென்றுள்ளனர்.
இந்த பள்ளி உருவான விதம் குறித்து பி.டி.உஷாவை சந்தித்து பேசினோம். “எத்தனை சர்வதேச போட்டிகளில் ஜெயித்தாலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்பது எனக்கு ஒரு மனக்குறைதான். நான் மட்டும் அல்ல மில்கா சிங், ஸ்ரீராம் சிங் போன்றவர்கள்கூட ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தவர்கள்தான். எங்களில் யாராவது ஒருவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தால் தடகளத்தில் இந்தியாவின் நிலை இன்று மாறியிருக்கும். எங்களுக்கு கிடைத்த வெற்றியால் கவரப்பட்டு மேலும் பலர் தடகளத்தில் சாதித்திருப்பார்கள்.
ஒலிம்பிக்கில் என்னால் சாதிக்க முடியாததை, நான் உருவாக்கும் வீராங்கனைகளை வைத்து சாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தில்தான் இந்தப் பள்ளியைத் தொடங்கினேன். என் கணவர் ஸ்ரீனிவாசனும் இதற்கு பேருதவியாக இருந்தார். முதலில் 5 மாணவிகளுடன் கொயிலாண்டியில் வாடகைக் கட்டிடத்தில் மிகச்சிறிய அளவில் இந்த பள்ளியைத் தொடங்கினேன். எனக்குத் தெரிந்த தொழிலதிபர்கள் பலரும் இதற்கு உதவி செய்தனர். அவர்கள் தந்த உதவியால் இந்தப் பள்ளி மெல்ல மெல்ல வளர்ந்தது.
முதலில் இந்த பள்ளியை யாரும் அத்தனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் ஏதோ விளையாட்டாக இதை நடத்துவதாக நினைத்தார்கள். ஆனால் அதைப் பொய்யாக்க கடுமையாக போராடினேன். என்னிடம் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் நான் பணம் எதையும் பெற்றதில்லை. இலவசமாக தங்குமிடம் வழங்கி தடகளப் பயிற்சி அளித்ததுடன் அருகில் உள்ள பள்ளியில் அவர்கள் படிப்பதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தேன். மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் என்னுடைய மாணவிகள் சாதனைகளைப் படைக்கத் தொடங்கியதும், எங்கள் பள்ளி மீது கவனம் திரும்பியது. கேரள மாநில அரசும் எங்களுக்கு உதவ முன்வந்தது.
இதைத் தொடர்ந்து கினலூரில் கேரள அரசு எங்களுக்கு இடத்தைக் கொடுத்ததுடன், 2008-ம் ஆண்டில் இங்கு இடம்பெயர்ந்தோம். 5 வீராங்கனைகளுடன் தொடங்கிய எங்கள் பள்ளியில் இன்று 15 மாணவிகள் உள்ளனர். இவர்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இங்கு தங்கி பயிற்சிபெறத் தேவையான உதவிகளை செய்து வருகிறோம். தடகளப் பயிற்சி மட்டுமின்றி அவர்களின் பள்ளி கல்லூரி படிப்புகளையும் கவனித்துக் கொள்கிறோம்.
எங்கள் மாணவிகளில் ஒருவரான டிண்டு லுகா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். மேலும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். அவர் உட்பட எங்கள் பள்ளியில் பயிலும் மாணவிகள் சர்வதேச போட்டிகளில் இதுவரை 61 பதக்கங்களை வென்றுள்ளார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. இந்த பள்ளி மேலும் வளர அனைவரின் உதவியும் தேவை” என்றார் உஷா.
ஆரம்பத்தில் தொழிலதிபர்கள் மற்றும் மாநில அரசின் உதவிகளுடன் இந்த பள்ளி நடந்து வந்தாலும், தற்போது புதிதாக ‘கிரவுட் பண்டிங்’ என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் பி.டி.உஷா. “இந்த திட்டத்தின்படி, உங்களால் முடிந்த பணத்தை செலுத்தி எங்களிடம் பயிற்சி பெறும் தடகள வீராங்கனைகளுக்கு ஸ்பான்சர் ஆகலாம். இதற்கு வருமான வரி விலக்கு உண்டு என்பது ஒருபுறம் இருந்தாலும், நம்மாலும் இந்திய விளையாட்டுத் துறைக்கு ஏதோ செய்ய முடிந்தது என்ற திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும். பணம் மட்டும்தான் என்றில்லை. விளையாட்டு உபகரணங்கள், பர்னிசர்கள் என்று எதை வேண்டுமானாலும் கொடுத்து உதவலாம். உங்களுக்கு தெரிந்து யாராவது இளம் விளையாட்டு வீரர்கள் போதிய உதவியின்றி தவித்தால் அதையும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். நாங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வோம். மொத்தத்தில் இந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் ஒரு இயக்கமாகவே இதை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்” என்கிறார் உஷா.
ஆரம்பத்தில் கொயிலாண்டிக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த உஷாவின் சிஷ்யைகள் தற்போது சர்வதேச தரத்திலான சிந்தடிக் ஓடுதளத்தில் (கடந்த ஆண்டு பிரதமர் மோடி இதைத் திறந்து வைத்தார்) பயிற்சி பெற்று வருகிறார்கள். தினசரி காலை 4 மணியில் இருந்து அவர்களின் பயிற்சி தொடங்குகிறது. உஷாவைத் தவிர அவருக்கு உதவியாக மேலும் 2 பயிற்சியாளர்கள் இங்கு உள்ளனர்.
தன்னுடைய காலத்தில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் என எல்லா வகையிலான ஓட்டத்திலும் கலந்துகொண்டவர் பி.டி.உஷா. “குறிப்பிட்ட ஏதாவது ஒரு ஓட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் என்னால் ஒலிம்பிக்கில் சாதித்திருக்க முடியும் என்று நினைக்கிறேன். அதனால்தான் என்னிடம் பயிற்சி பெற வருபவர்களுக்கு ஏற்ற தடகள விளையாட்டு எது என்பதை அறிந்து குறிப்பிட்ட அந்த விளையாட்டில் அவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கிறேன்” என்கிறார்.
ஒலிம்பிக்கில் தன்னால் பெற முடியாத பதக்கத்தை 2020-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்கில் தன் மாணவிகள் மூலம் பெற வேண்டும் என்பதே உஷாவின் தற்போதைய லட்சியமாக உள்ளது. அதற்கு அவர் நம்புவது டிண்டு லுகாவையும், ஜிஸ்னா மேத்யூவையும்தான்.
“800 மீட்டர் ஓட்டத்தில் டிண்டுவும், 400 மீட்டர் ஓட்டத்தில் ஜிஸ்னா மேத்யூவும் என் கனவை நனவாக்குவார்கள் என்று நம்புகிறேன். அதைத்தவிர வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் என் மாணவிகள் பதக்கத்தை அள்ளி வருவார்கள் என்று நம்புகிறேன்” என்கிறார் உஷா.
உங்களிடம் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்காத இளம் வீராங்கனைகளுக்கு தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன என்று கேட்டதற்கு, “கடுமையாக முயற்சி செய்யுங்கள். எந்தக் கட்டத்திலும் தளராதீர்கள். சில தோல்விகள் வந்தாலும் சோர்ந்து விடாமல் கடுமையாக முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும்” என்றார் உஷா.
ஜெயித்தவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
உஷாவிடம் பயிற்சி பெற (பாக்ஸ் மேட்டர்)
ஒவ்வொரு ஆண்டும் கினலூரில் உள்ள தனது பள்ளியில் தடகளத் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களை தன் பள்ளியில் சேர்க்கிறார் உஷா. இந்த ஆண்டுக்கான தேர்வு, வரும் பிப்ரவரி 9-ம் தேதி காலையில் நடக்கிறது. திறமையும், விருப்பமும் இருப்பவர்கள் தங்கள் பயோ டேட்டா மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அன்றைய தினம் காலை 8 மணிக்குள் நேரில் அணுகலாம். இதுபற்றி மேலும் தகவல்களை பெற விரும்புபவர்கள் உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்ஸின் +91 496 2645811, +91 496 2645812 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் ushaschool@rediffmail.com என்ற ஈமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment