Powered By Blogger

Wednesday, May 4, 2022

காதலில் க்ளீன் போல்ட்

 


பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்று கிரிக்கெட்டும் காதலும்.  1960-களின் கிரிக்கெட் நாயகனான பட்டோடி,  அப்போதைய கனவுக் கன்னி  ஷர்மிளா தாகூரை காதலித்து தூக்க, அப்போது தொடங்கியது இந்த காதல் படலம். கபில்தேவ், கங்குலி, அசாருதீன், தோனி என்று  தொடரும் இந்த  காதல் பாரம்பரியம் இன்றைக்கு  இஷான் கிஷன் வரை வந்திருக்கிறது. இந்த காதல் ரூட்டில் இப்போதைக்கு சொல்லி அடிக்கும் கில்லிகளைத் தெரிந்துகொள்வோம்:

ரிஷப் பந்த்:

தோனி, கோலி வரிசையில் கிரிக்கெட்டில் டாப் கியரில் பயணிப்பவர் ரிஷப் பந்த்.  23 வயதிலேயே  52.5 கோடி சொத்துக்கு உரிமையாளர்.   ஆண்டு வருமானம் சுமார் 10 கோடி ரூபாய்.  ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு கேப்டன். இப்படி ஒரு பக்கம் பணம், மறுபக்கம் புகழ் என்று காதலுக்கு தேவையான அம்சங்கள் பொருந்திப் போனதால், அவருக்கு காதலி கிளிக் ஆனதில் ஆச்சரியம் இல்லை. பந்த்தின்  காதலியின் பெயர் இஷா நேகி (Isha Negi). 2019-ல் நடந்த ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்தார் ரிஷப் பந்த்.

பந்த்தைப் போலவே இஷா நேகியும் சாதனையாளர்தான். சிறுவயதிலேயே தொழிலதிபரான  இஷா, சில மாதங்களுக்கு முன் டெல்லியில் இஷாஸ் குளோசெட்என்ற நிறுவனத்தைத் தொடங்கி உடைகள்  முதல் காலணிகள் வரை இளசுகளுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் வழங்கி வருகிறார். நல்ல காதலனுக்கு இலக்கணமாக இந்த நிறுவனத்தின் விளம்பரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் ரிஷப் பந்த். பணி நேரம் போக மற்ற நேரங்களில் இவர்கள் ஒன்றாகச் சுற்ற, பத்திரிகையாளர்கள் இவர்களைச் சுற்றி வருகிறார்கள்.

சுப்மான் கில்

உண்மையா பொய்யா தெரியாது... ஆனால் சச்சின் மகளான சாராவை சுப்மான் கில் காதலிப்பதாக ஒரு செய்தி பத்திரிகை வட்டாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. சாராவோ, சுப்மான் கில்லோ இந்தச் செய்தியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சுப்மான் கில் கிரிக்கெட்டில் சாதிக்கும்போதெல்லாம் தனது வலைதளப் பக்கத்தில் சாரா கொண்டாடுவதும், சாராவின் இன்ஸ்டா போஸ்ட்களுக்கு கில் சுவாரஸ்யமாக பதிலளிப்பதும் இந்த வதந்திகளுக்கு கூடுதல் சிறகுகளைத் தருகின்றன.

இந்தச் செய்திகளால் சாராவுக்கு பலன் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் கில் காட்டில் மழை பெய்வதற்கு இந்த வதந்திகளும் ஒரு முக்கிய காரணம்.  என்ன இருந்தாலும் சச்சினுக்கு மாப்பிள்ளையா வரப் போறவராச்சே என்று கில்லுக்கு மரியாதை கூடி வருகிறது. இந்த கிசுகிசுக்கள் விஷயத்தில் கில், சாராவைப் போல் சச்சினும் அமைதி காப்பது கூடுதல் புகையைக் கிளப்புகிறது

கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக கருதப்படும், கே.எல்.ராகுலில் எதிர்காலம் இப்போது ஆத்யா ஷெட்டியின் கையில். பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான ஆத்யா ஷெட்டி, 2019 முதல் ராகுலின் இதயச் சிறையில் இருக்கிறார். இலை மறை காய் மறையாக இருந்துவந்த இவர்களின் நட்பு, சில மாதங்களுக்கு முன் சுனில் ஷெட்டியின் மகன் ஆஹான் ஷெட்டியின் சினிமா பிரிவியூவுக்கு ஆத்யாவும் ராகுலும் ஜோடியாக வந்ததன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பல இடங்களில் ஒன்றாகச் சுற்றினாலும் இப்போதைக்கு இந்த ஜோடி, தங்கள் காதலை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

இஷான் கிஷன்

காதில் கடுக்கன் சகிதம் கிரிக்கெட் மைதானத்தில்  ஃபேஷன் ஹீரோவாக சுற்றி வருபவர்  இஷான் கிஷன். இதனால்தானோ என்னவோ ஃபேஷன் உலகில் கொடிகட்டிப் பறக்கும் அதிதி ஹூண்டியாவின் (Aditi Hundia)  மனதில் சேர்போட்டு அமர்ந்திருக்கிறார் இஷான். இந்த ஃபேஷன் நட்சத்திரங்கள் ஜோடி சேர்ந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் பிறந்தவர் அதிதி ஹூண்டியா. 2017-ம் ஆண்டில் ராஜஸ்தான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிதி, அதே ஆண்டில் நடந்த மிஸ் இந்தியா போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இதில் பட்டம் பெறாமல் போனாலும், 2018-ம் ஆண்டில் மிஸ் டிவா - சூப்பர்நேஷனலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அழகிப் போட்டிகளில் பங்கேற்கும் நேரம்போக இஷான் கிஷன் சாதனை படைக்கும்போதெல்லாம் அவரை வாழ்த்தி ட்வீட் போடுவதில் நேரத்தைச் செலவழிக்கிறார் அதிதி.

 

No comments:

Post a Comment