ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளிடம் எத்தனை அணு
ஆயுதங்கள் உள்ளன?
சர்வதேச அளவில் தற்போது 9 நாடுகளிடம் மட்டுமே
அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான்,
இந்தியா, இஸ்ரேல், வடகொரியா ஆகியவைதான் அந்த 9 நாடுகள். இந்த கணக்குப்படி உக்ரைன் நாட்டிடம்
அணு ஆயுதம் ஏதும் இல்லை.
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (Federation
of American Scientists) வெளியிட்டுள்ள கணக்கின்படி ரஷ்யாவிடம்தான் உலகிலேயே அதிக அணு
ஆயுதங்கள் உள்ளன. இதை வைத்துதான் மற்ற நாடுகளுக்கு ரஷ்யா ஆட்டம் காட்டுகிறது. இந்நாட்டிடம்
அதிகபட்சமாக 5,977 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் இதில் சுமார் 1,500 அணு ஆயுதங்கள் காலாவதியானவை
என்று கூறப்படுகிறது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் 1,185 அணு ஆயுதங்கள்
பொருத்தப்பட்டுள்ளன. நீர்மூழ்கிக் கப்பல்களில் சென்று தாக்கும் ஏவுகணைகளில் 800 அணு
ஆயுதங்களும், விமானம் மூலம் தாக்கும் ஏவுகணைளைகளில் 580 அணு ஆயுதங்களும் பொருத்தப்பட்டு
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை
சிறிய வகை அணு ஆயுதங்கள் ஆகும்.
ரஷ்யாவுக்கு நிகராக நேட்டோ நாடுகளிடம்
5,943 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில் அமெரிக்காவிடம் மட்டும் 5,428 அணு ஆயுதங்களும் பிரான்ஸிடம்
290, இங்கிலாந்திடம் 225 அணு ஆயுதங்களும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சீனா 350
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நிலையில் இந்தியாவிடம் 160 அணு ஆயுதங்கள் இருக்கின்றன.
அணு ஆயுதங்களை வைத்துள்ள 9 நாடுகளில் வட கொரியாவைத் தவிர மற்ற 8 நாடுகளும் அணு ஆயுத
பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பெட்ரோலில் இயங்கும் கார்களைவிட மின்சாரத்தில் இயங்கும் கார்கள்
அதிக அளவில் சுற்றுச்சூழலைக் காக்கிறதா?
பெட்ரோலில் இயங்கும் கார்களைவிட மின்சாரத்தில் இயங்கும்
கார்கள் சுற்றுச்சூழலை அதிக அளவில் காக்கிறது என்பது உண்மை. அதேநேரத்தில் அவை எந்த அளவுக்கு சுற்றுச்சூழலைக்
காக்கிறது என்பது நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் மின்சாரத்தில்
இயங்கும் கார்களை பயன்படுத்துவதால் கரியமில வாயு வெளியேற்றப்படுவது 69 சதவீதம் குறைகிறது.
ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மின்சாரத்தில்
இயங்கும் கார்களைப் பயன்படுத்தும்போது கரியமில வாயு வெளியேற்றப்படுவது 34 சதவீதம் மட்டுமே
குறைகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் மின்சாரம் உற்பத்தியாகும்
விதத்தைப் பொறுத்து கரியமில வாயுவின் வெளியேற்றம் மாறுபடுகிறது. மேற்கத்திய நாடுகளில்
சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் மாசு இல்லாத
படிம எரிபொருளில் (fossil fuels) இருந்து மின்சாரம்
உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே அங்கு மின்சாரத்தால் இயங்கும் கார்கள் அதிக அளவில்
சுற்றுச்சூழலை காக்க உதவுகின்றன. அதே நேரத்தில் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நிலக்கரியை
பயன்படுத்தி அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்படி மின்சாரத்தை தயாரிக்கும்போது
அவை அதிக அளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகின்றன. அதனால் அங்கு மின்சாரத்தால் இயங்கும்
கார்கள் குறைந்த அளவிலேயே சுற்றுச்சூழலை காக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட்டில் ஹெல்மெட் எப்போது முதல் பயன்படுத்தப்படுகிறது?
1978-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதிதான் முதல்
முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹெல்மெட் பயன்படுத்தப்பட்டது. கிரஹாம்
யாலெப் என்ற ஆஸ்திரேலிய வீரர்தான் கிரிக்கெட் போட்டியின்போது முதலில் ஹெல்மெட்டைப்
பயன்படுத்தினார்.
முன்னதாக 1930-களில் ஹெல்மெட் போன்ற
ஒரு நவீன தலைக்கவசத்தை அணிந்து பாஸ்டி ஹெண்டிரன் என்ற இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்
போட்டிகளில் ஆடியுள்ளார். 3 தொப்பிகள் மற்றும் கால்காப்பின் சில பாகங்களைக் கொண்டு
இது உருவாக்கப்பட்டிருந்தது. பின்னர் 1977-ம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான டென்னிஸ் அமிஸ்,
உலக சீரிஸ் கிரிக்கெட் போட்டிகளின்போது, பைக் ஓட்டுபவர்கள் பயன்படுத்தும் ஹெல்மெட்டை
சற்று மாற்றி வடிவமைத்து, அதை அணிந்து ஆடினார். இதைத்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்ற விதத்தில்
மேலும் சில மாற்றங்களைச் செய்து கிரஹாம் யாலெப் பயன்படுத்தினார்.
No comments:
Post a Comment