Powered By Blogger

Monday, October 31, 2022

நொவாக் ஜோகோவிச் 21

 


விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 7-வது முறையாக பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச். இதன்மூலம் அவர் பெற்றுள்ள கிராண்ட் ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றால் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற ரபேல் நடாலின் (22 பட்டங்கள்) சாதனையை ஜோகோவிச்சால் எட்டிப் பிடிக்க முடியும். இந்த சூழலில் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச்சைப் பற்றி 21 சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்..

 

செர்பியாவில் உள்ள பெல்கிரேட் நகரில் பிறந்தவர் ஜோகோவிச். அவரது அப்பா பனிச்சறுக்கு வீரராகவும், பயிற்சியாளராகவும் இருந்தார். பின்னாளில் அவர் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டார்.

 

டென்னிஸ் விளையாட்டைத் தவிர  பனிச்சறுக்கு, கால்பந்து ஆகிய விளையாட்டுகளிலும் நொவோக் ஜோகோவிச்சுக்கு ஆர்வம் அதிகம். டென்னிஸைப் போலவே சிறுவயதில் அப்பாவிடம் பனிச்சறுக்கு விளையாட்டிலும் அவர் பயிற்சி பெற்றுள்ளார்.

 4 வயதில் ஜோகோவிச்சுக்கு ஒரு டென்னிஸ் ராக்கெட்டைப் பரிசளித்தார் அவரது அப்பா. அந்த வயது முதலேயே டென்னிஸ் போட்டிகளில் ஆடி அவர் பயிற்சி பெற்ற்றார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனையான மோனிகா செலஸின் பயிற்சியாளர் ஜெலீனா ஜென்சிக்தான் ஜோகோவிச்சின் முதல் பயிற்சியாளர். ஜோகோவிச்சின் 6-வது வயதிலேயே அவரது ஆற்றலை கண்டுபிடித்து ஜெலீனா ஜென்சிக் அவருக்கு பயிற்சி அளித்தார்.

12 வயதுவரை ஜெலீனாவிடம் பயிற்சிபெற்ற ஜோகோவிச், அதன்பிறகு தனது 13-வது வயதில் ஜெர்மனியின் மியூனிச் நகரில் உள்ள பிலிக் அகாடமியில் பயிற்சி பெறச் சென்றார்.

ஜோகோவிச் தனது 14-வது வயது முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆடி வருகிறார்.

2001-ம் ஆண்டில் தனது 14 வயதில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் ஆடிய ஜோகோவிச், இந்த தொடரில் ஒற்றையர் பட்டம், இரட்டையர் பட்டம் மற்றும் யுகோஸ்லாவிய அணிக்கான குழு சாம்பியன் பட்டம் ஆகியவற்றை வென்றார். இப்படி ஒரே தொடரிலேயே ஜோகோவிச் 3 பட்டங்களை வென்றது டென்னிஸ் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது பள்ளிக்கால தோழியான ஜெலீனா ரிஸ்டிக்கை 2014-ம் ஆண்டில் ஜோகோவிச் மணந்தார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஜோகோவிச்சால் செர்பியன், இத்தாலியன், ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளை சகஜமாக பேச முடியும்.

2007-ம் ஆண்டில் ‘நொவாக் ஜோகோவிச் அறக்கட்டளை’ என்ற அமைப்பை ஜோகோவிச் தொடங்கினார். செர்பியாவில் நடந்த போரின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை இந்த அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இதேபோல் பல்வேறு இடங்களில் தேவாலயங்களை அமைப்பதற்கும் நிதியுதவி வழங்கி வருகிறது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடக்கும்போதெல்லாம், அங்குள்ள புல்தரையில் இருந்து பிற்களை பிடுங்கி சாப்பிடுவது ஜோகோவிச்சிடம் உள்ள வினோத பழக்கம். இதுபற்றி கேட்டால், புற்களுக்கு வியர்வையின் சுவை இருப்பதாக கூறுவார்.

பூடில் பிடரி என்ற நாய்க்குட்டியை ஜோகோவிச் செல்லமாக வளர்த்து வருகிறார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்த நாய்க்குட்டியையும் கொண்டுசெல்வது ஜோகோவிச்சின் வழக்கம்.

 ‘தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 2’ என்ற படத்தில் சில காட்சிகளில் ஜோகோவிச் நடித்துள்ளார். ஆனால் படத்தின் நீளம் கருதி பின்னர் அந்த காட்சிகள் வெட்டப்பட்டன.

தனது வாழ்க்கைப் பயணத்தை, ‘செர்வ் டு வின்’ என்ற பெயரில் புத்தகமாக ஜோகோவிச் எழுதியுள்ளார்.

உணவுக் கட்டுப்பாட்டை ஜோகோவிச் தீவிரமாக கடைபிடித்து வருகிறார். அசைவ உணவுகளை அவர் முற்றிலுமாக தவிர்த்து வருகிறார்.

வெளியூரில் டென்னிஸ் விளையாடச் செல்லும் சமயங்களில் தனது உணவை தானே சமைத்துச் சாப்பிடுவது இவரது வழக்கம்.

மோண்டே கார்லோ நகரில் ’ஏக்விடா’ என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் ஜோகோவிச். இந்த உணவகத்தில் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகின்றன. தனது பெற்றோர் உணவகங்களை நடத்தியவர்கள் என்பதால் அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த உணவகத்தை நடத்துவதாக ஜோகோவிச் சொல்கிறார்.

மற்ற டென்னிஸ் வீரர்களைப் போல் நடித்துக் காட்டுவதில் ஜோகோவிச் வல்லவர். டென்னிஸ் போட்டிகளின்போது சக வீரர்களான ரபேல் நடால், மரியா ஷரபோவா ஆகியோரைப்போல் நடித்துக்காட்டி ரசிகர்களை மகிழ்விப்பது இவரது வழக்கம்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வென்ற ஜோகோவிச்சுக்கு பரிசுப் பணமாக 19 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசுப் பணத்துடன் சேர்த்து ஜோகோவிச்சின் மொத்த சொத்து மதிப்பு 220 மில்லியன் டாலராக உள்ளது.

தியானத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் ஜோகோவிச். தினந்தோறும் சுமார் 1 மணி நேரத்துக்கு தியானம் செய்வது அவரது வழக்கம்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டனில் 7 முறையும், ஆஸ்திரேலிய ஓபனில் 9 முறையும், அமெரிக்க ஓபனில் 4 முறையும், பிரெஞ்சு ஓபனில் 1 முறையும் ஜோகோவிச் பட்டம் வென்றுள்ளார்.

 

 

 

 

 

 

 

  

No comments:

Post a Comment