மகாத்மா காந்தி என்றதும் நம் நினைவுக்கு வரும் விஷயங்களில் ஒன்று ராட்டை. தேச விடுதலைப் போராட்டம், தலைவர்களுடனான சந்திப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று என்னதான் பரபரப்பாக இருந்தாலும் தினமும் ஒரு மணி நேரமாவது ராட்டையில் நூல் நூற்கும் வழக்கத்தை அவர் தவற விட்டதில்லை. தான் மட்டுமின்றி தனது ஆசிரமத்தில் உள்ளவர்களும் தினமும் ஒரு மணி நேரமாவது ராட்டையில் நூல் நூற்க வேண்டும் என்பதை கட்டாயமாக வைத்திருந்தார் காந்தி. அவரைப் பொறுத்தவரை ராட்டையில் நூல் நூற்பது என்பது ஒருவகை தியானமாகவே இருந்துள்ளது.
காந்தியடிகளுக்கு மிகவும் பிரியமான ராட்டையுடன் சேர்த்து மார்கரெட் புரூக் ஒயிட் என்ற பெண் புகைப்படக்காரர் கடந்த 1946-ம் ஆண்டு எடுத்த படம் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1946-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சாதகமான சூழல் நிலவ, அதற்கு காரணமாக விளங்கிய மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் எதிர்காலத் தலைவர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து, அவர்களைப் படம் பிடிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் லைஃப் பத்திரிகை மார்கரெட் புரூக் ஒயிட்டை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
காந்தியின் ஆசிரமத்துக்கு சென்ற மார்கரெட், ராட்டையுடன் அவரைப் புகைப்படம் எடுக்கும் தன் விருப்பத்தைக் கூறியுள்ளார். அதற்கு காந்தியின் உதவியாளர்கள், “நீங்கள் ராட்டையில் நூல் நூற்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே அவர் படமெடுத்துக் கொள்ள ஒப்புக்கொள்வார்” என்று காந்தியின் நிபந்தனையை கூறியுள்ளனர். இதற்காக சில நாட்கள் பயிற்சி பெற்ற பின்னர், காந்தி மவுன விரதம் இருந்த ஒரு நாளில் அவரை படமெடுக்கும் வாய்ப்பு மார்கரெட்டுக்கு கிடைத்துள்ளது.
காந்திக்கு கண்களைக் கூசவைக்கும் அதிபிரகாசமான ஒளி பிடிக்காது என்பதால் அவரை அதிகம் தொந்தரவு செய்யாத வகையில் பிளாஷ் இல்லாமல் படமெடுக்க வேண்டும் என்று உதவியாளர்கள் மார்கரெட்டைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் மிகவும் போராடி கேமராவில் பிளாஷை பொருத்தி படமெடுக்க காந்தியின் உதவியாளர்களிடம் அனுமதி வாங்கினார் மார்கரெட். முதல் 2 முயற்சிகளில் படம் சரியாக விழாத நிலையில் 3-வது முயற்சியில் இந்தப் படத்தை அவர் எடுத்துள்ளார். 1946-ம் ஆண்டில் காந்தியைப் பற்றி லைஃப் பத்திரிகையில் வெளியான செய்தியில் முதலில் இந்தப் படம் இடம்பெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவரைப்பற்றி வெளியான கட்டுரையில் இந்த படம் இடம்பெற்றது. இன்றைய தினம் காந்தியின் முக்கியமான படங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. 1948-ம் ஆண்டு காந்தி கொல்லப்படுவதற்கு சில மணித்துளிகள் முன்பும் மார்கரெட் அவரைப் பேட்டிகண்டு புகைப்படம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்கரெட் புரூக் ஒயிட்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1904-ம் ஆண்டு பிறந்த மார்கரெட் புரூக் ஒயிட், புகழ்பெற்ற லைஃப் பத்திரிகையின் புகைப்பட கலைஞராகவும், செய்தியாளராகவும் இருந்துள்ளார். உலகின் முதல் டாக்குமென்டரி போட்டோகிராபர் என்ற பெருமை இவருக்கு உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலும், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போதும் பல சிறந்த புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார். இடைக்காலத்தில் பர்க்கின்சஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1971-ம் ஆண்டு காலமானார். தனது வாழ்க்கை வரலாற்றை போர்ட்ரெயிட் ஆஃப் மைசெல்ஃப் (Portrait of Myself ) என்ற பெயரில் அவர் புத்தகமாக எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment