Powered By Blogger

Tuesday, February 12, 2019

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய நன்நடத்தை முறைகள்



குழந்தைகளை கல்வியில் மட்டுமின்றி நடத்தையிலும் சிறந்தவர்களாக வளர்க்க வேண்டியது  பெற்றோர்களின் கடமை. அந்த வகையில் சிறந்த குணவான்களாக இருக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் கற்றுக் கொடுக்க வேண்டிய நன்னடத்தை முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்...

நேரத்தை மதித்தல்

 ‘காலம் பொன் போன்றது’ என்பார்கள். அந்த காலத்தை மதிக்க சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். காலையில் குறித்த நேரத்தில் எழுவது, பள்ளிக்கோ அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சிகளுக்கோ செல்வதாக இருந்தால் குறித்த நேரத்தில் செல்வது அவசியம் என்பதை சிறு வயதில் இருந்தே குழந்தைகள் மனதில் பதியவைக்க வேண்டும். பெற்றோர்களும் அதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்து, அவர்களுடன் ஒரு இடத்துக்கு செல்லும்போது காலம் தவறாமல் செல்லவேண்டும். அதுபோல் நேரத்தை வீணடிக்காமல் புதிய விஷயங்களைக் கற்பது எப்படி என்பதையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் காலத்தை உணர்ந்து செயலாற்றுவார்கள். இதனால் வெற்றிகள் அவர்களைத் தேடி வரும்.

விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்பது

முன்பெல்லாம் உறவினர்களோ, விருந்தினர்களோ வீட்டுக்கு வந்தால் அங்குள்ள குழந்தைகள் ஓடிச் சென்று அவர்களை வரவேற்பார்கள்.  அவர்கள் கொண்டுவரும் உணவுப் பண்டங்களை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு துள்ளிக் குதித்து வீட்டுக்குள் செல்வார்கள். இது வந்திருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகில் எல்லாமே மாறிவிட்டது. வீட்டுக்கு யார் வந்தாலென்ன, போனாலென்ன என்ற மனப்போக்கில் குழந்தைகள், தாங்கள் உண்டு தங்களின் கம்ப்யூட்டர் உண்டு என்று இருக்கிறார்கள். அப்படி கம்ப்யூட்டரில் விளையாடாத குழந்தைகளும் தங்கள் வீட்டுப் பாடங்களிலோ, விளையாட்டுகளிலோ கவனம் செலுத்தி, வந்திருப்பவர்களை கவனிப்பதில்லை. இதனால் உறவுச் சங்கிலிகள் அறுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகள் விஷயத்தில் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

என்னதான் வேலை இருந்தாலும், விளையாட்டின் உற்சாகத்தில் இருந்தாலும், வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவர்களை முதலில் இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிப் புரியவையுங்கள். அதேபோல் பெற்றோரும், விருந்தினர்கள் யாராவது வந்தால், வீட்டில் உள்ள டிவியை கண்டிப்பாக அணைத்து வைத்து, வந்திருப்பவர்களுடன் இன்முகத்துடன் பேசுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கும் அந்தப் பழக்கம் வரும். இதனால் எதிர்காலத்தில் அடுத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

பெரியவர்களை மதிக்க வேண்டும்
குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதுடன் பெரியவர்களை மதிப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். பெரியவர்கள் வரும்போது எழுந்து நிற்கவேண்டும், பேருந்துகளில் செல்லும்போது வயதானவர்கள் வந்தால் அவர்கள் அமர்வதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்பன உட்பட பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய சிறு விஷயங்களை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கலாம். சில குழந்தைகள் பெரியவர்கள் பேசும்போது குறுக்கே பேசுவார்கள். இது அவர்களுக்கு எரிச்சலைத் தரலாம் என்பதால், ‘பெரியவர்கள் பேசும் நேரத்தில் குறுக்கே பேசக் கூடாது. அவர்களாக ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் சொல்ல வேண்டும்’ என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால், முதலில் அவர்களுக்கு உணவு பரிமாறிய பிறகு அடுத்தவர்களுக்கு உணவு பரிமாறுவது நல்லது. இதுபோன்ற விஷயங்களைப் பார்க்கும் குழந்தைகள் மனதிலும் பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் பதிய வாய்ப்பு உண்டு.

தூய்மையைப் பேணுதல்

 ‘சுத்தம் சோறு போடும்’ என்பார்கள். தினந்தோறும் காலையில் எழுந்ததும் குளிப்பது, தலையில் எண்ணெய் வைத்து ஒழுங்காக சீவுவது, நகங்களை வெட்டுவது, பொது இடங்களில் மூக்கை நோண்டாமல் இருப்பது, அழுக்கான இடங்களில் கைவைக்காமல் இருப்பது  என தூய்மையைப் பேணவேண்டிய விஷயங்களைக் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இது  நோய்கள் பரவாமல் தடுப்பதுடன், மற்றவர்களின் மரியாதையைப் பெறவும் குழந்தைகளுக்கு உதவும். தங்களைப் போலவே வீட்டையும், பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். குறிப்பாக குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் குப்பைத் தொட்டிகளில் போடுவது, கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்ற பழக்கத்தை அடுத்த தலைமுறையினரிடம் இருந்தாவது அறவே ஒழிக்கவேண்டும்.

புத்தகம் படித்தல்

செல்போன்களும் டிவியும் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் குழந்தைகளிடையே படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு உலக விஷயங்களைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்வதும் குறைந்து வருகிறது. இந்த நிலை உங்கள் குழந்தைகளுக்கு வராமல் இருக்க, தினமும் குறைந்தபட்சம் அரை மணிநேரமாவது அவர்களைப் படிக்க வையுங்கள். சிறு குழந்தைகளாக இருப்பின் நீதிக் கதைகளை முதலில் படிக்க வைக்கலாம். இதன்மூலம் படிக்கும் ஆர்வத்தை அவர்களிடம் ஏற்படுத்துவது மட்டுமின்றி, நல்ல நீதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை படிப்படியாக அதிகரித்து நாளிதழ்களை படிப்பது, நல்ல புத்தகங்களை படிப்பது என்று விரிவுபடுத்த வேண்டும். இதன்மூலம் அவர்களின் பொது அறிவை விரிவுபடுத்தலாம்.

கருணை உள்ளம்

 மனிதாபிமானம் குறைந்துவரும் இன்றைய காலகட்டத்தில் அடுத்தவர்களுக்கு உதவும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். இதை ஊக்குவிக்கும் விதமாக, நாம் யாருக்காவது உதவ நினைத்தால், அதைக் குழந்தைகளின் மூலம் செய்யவேண்டும். அவர்களின் பொம்மைகளை மற்ற குழந்தைகளுடன் பகிர்வது, வயது முதிர்ந்தவர்களுக்கு சாலையைக் கடப்பது முதலான உதவிகளை செய்வது ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். இல்லாதவர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி போதிக்க வேண்டும்.
அடிப்படை மரியாதைகள்
தங்களுக்கு ஒரு பொருள் தேவையென்றால், அதைப் பணிவாக கேட்பது, அந்த பொருளை அடுத்தவர்கள் தந்தால் அதற்கு நன்றி தெரிவிப்பது போன்ற அடிப்படையான மரியாதைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோல் வீட்டிலோ அல்லது வெளியிலோ ஒரு பொருளை எடுப்பதென்றால், அதன் சொந்தக்காரர்களிடம் முறையான அனுமதியைப் பெறவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு வீட்டுக்குள்ளோ, அறைக்குள்ளோ திடுமென்று நுழைந்துவிடக் கூடாது, கதவைத் தட்டி, ‘உள்ளே வரலாமா’ என்று அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என்ற பழக்கத்தையும் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.
இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்கள் உங்கள் குழந்தைக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும். சமூகத்தில் சிறந்த குணவான்களாக உங்கள் குழந்தை வளரவும் இவை வழிவகுக்கும்.
  


No comments:

Post a Comment