சேப்டர் - 6
அக்டோபர் - 27
என் தம்பியை சுட்டுட்டாங்களே!...
ஹாக்கி, கிரிக்கெட் போன்ற போட்டிகளில் மட்டுமின்றி, தடகளத்திலும் இந்தியர்களால் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் மில்கா சிங். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற இவர், 1960-ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4-வதாக வந்து நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார்.
விளையாட்டுப் போட்டிகளில் தனது சாதனைகளுக்கெல்லாம் மூல காரணம் தன் சகோதரி இஷார்தான் என்கிறார் மில்கா சிங். சிறுவயது முதலே மில்கா சிங்கின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தவர் இஷார். ஒருமுறை டிக்கெட் எடுக்காமல் ரயிலில் சென்றதற்காக கைது செய்யப்பட்ட மில்கா சிங், திஹார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சமயத்தில் தன்னிடம் இருந்த ஒரே நகையை அடகுவைத்து, மில்கா சிங்கை சிறையில் இருந்து மீட்டுள்ளார் இஷார்.
பின்னாளில் தான் பங்கேற்ற போட்டி ஒன்றைக் காண இஷாரை அழைத்துச் சென்றுள்ளார் மில்கா சிங். போட்டியைத் தொடங்குவதற்கு அடையாளமாக நடுவர் துப்பாக்கியை எடுத்துச் சுட, ‘ஐயோ... என் தம்பியை சுட்டுட்டாங்களே!... என்று அலறியுள்ளார் இஷார். மைதானத்தில் இருந்தவர்களுக்கு இந்த சம்பவம் மிகப்பெரிய நகைச்சுவையாக இருந்துள்ளது. ஆனால், “கிராமத்தை விட்டு வெளியில் வராதவரான என் அக்காவின் செயல் மற்றவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் என் மீது அவர் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகத்தான் அதைப் பார்க்கிறேன்” என்று இந்த சம்பவத்தைப் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மில்கா சிங்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சேப்டர் - 7
அக்டோபர் - 28
கவாஸ்கரும் காது மடல் ஓட்டையும்
மும்பையைச் சேர்ந்த மீனாள் என்ற பெண்ணுக்கு 1949-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் குழந்தையைப் பார்க்க வந்திருந்த அவரது உறவினரான நானா காகாவின் கண்களை, குழந்தையின் காது மடலில் இயற்கையாக அமைந்திருந்த ஒரு சிறிய ஓட்டை ஈர்த்தது. அதை விசேஷமானதாக நினைத்தார் நானா காகா.
அடுத்த நாள் காலையும் குழந்தையைப் பார்க்க வந்த நானா காகாவின் மடியில் குழந்தையை படுக்கவைத்தனர். ஆசையாய் குழந்தையின் முகத்தைப் பார்த்தவர் திடுக்கிட்டார். முந்தைய தினம் குழந்தையின் காது மடலில் தான் பார்த்த ஓட்டை இல்லாததே இதற்கு காரணம். எங்கோ தப்பு நடந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது. “மீனாளுக்கு பிறந்த குழந்தை இது இல்லை. அவளுடைய குழந்தையின் காது மடலில் ஓட்டை இருந்தது. ஆனால் இந்த குழந்தையின் காது மடலில் ஓட்டை இல்லை. குழந்தை மாறிவிட்டது” என்று ஆவேசமாக கத்தத்தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் முந்தைய தினம் பிறந்த குழந்தைகளை சோதித்துப் பார்த்ததில், காது மடலில் ஓட்டை உள்ள குழந்தை ஒன்று மீனவப் பெண்ணிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குளிப்பாட்டுவதற்காக குழந்தையை எடுத்துச் சென்ற சமயத்தில் குழந்தை மாறியது தெரியவந்தது. அப்படி காது மடலில் ஓட்டையுடன் பிறந்த குழந்தைதான் பின்னாளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த சுனில் கவாஸ்கர். தன்னுடைய வாழ்க்கை வரலாறான ‘சன்னி டேஸ்’ என்ற புத்தகத்தில் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ள சுனில் கவாஸ்கர், “அன்றைய தினம் என் உறவினர் மட்டும் காது மடலில் உள்ள ஓட்டையை கவனிக்காமல் இருந்தால், என் விதியே மாறியிருக்கும். இன்று நான் ஒரு மீனவராகி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பேன்” என்கிறார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சேப்டர் - 8
அக்டோபர் - 29
ஜப்பான் நாட்டின் அடையாளம்
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையான விளையாட்டுகள் அடையாளமாக இருக்கும். அந்த வகையில் ஜப்பான் நாட்டுக்கு அடையாளமாக இருக்கும் விளையாட்டு சூமோ மல்யுத்தம். இந்த விளையாட்டின் பெயரைச் சொன்னாலே நம் நினைவுக்கு வருவது இடுப்பில் அரையாடை மட்டுமே அணிந்துகொண்டு, மல்யுத்த போஸில் நிற்கும் ஜப்பானிய குண்டு வீரர்கள்தான். அந்த அளவுக்கு ஜப்பான் நாட்டின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது சூமோ மல்யுத்தம்.
ஜப்பானில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சூமோ மல்யுத்தங்கள் நடந்து வந்திருப்பதாக அந்நாட்டின் வரலாறு கூறுகிறது. ஆரம்ப காலங்களில் பயிர் விளைச்சல் அமோகமாக இருக்க கடவுளை வேண்டுவதற்காக வயல் வெளிகளில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் இது பொழுதுபோக்குக்கான விளையாட்டாக மாறியுள்ளது.
சூமோ விளையாட்டின் விதி மிகவும் எளிமையானது. 4.57 மீட்டர் விட்டத்தைக் கொண்ட ஒரு வட்டத்துக்குள் நின்றுகொண்டு வீரர்கள் சண்டையிட வேண்டும். வட்டத்துக்குள் நிற்கும் வீரர்கள், தங்கள் எதிராளியை அந்த வட்டத்தில் இருந்து வெளியே தள்ளிவிட வேண்டும். அல்லது எதிராளியை தூக்கி வீசவேண்டும். அப்படிச் செய்தால் புள்ளிகளைக் குவித்து வெற்றி பெறலாம். அதேநேரம் கால்களைத் தவிர உடலின் ஏதாவது ஒரு பகுதி தரையில் பட்டால், சம்பந்தப்பட்டவர் தோல்வி அடைந்ததாக கருதப்படுவார்.
ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு மழைக்காலத்தின் இறுதியிலும் சூமோ மல்யுத்த வீரர்களுக்கு மதிப்பு கூடும். இக்காலத்தில் சூமோ வீரர்கள் வீட்டுக்குள் வந்து பீன்ஸ்களை எறிந்து, “பேய்களே ஓடிப்போய் விடுங்கள்; இந்த வீட்டை நல் அதிர்ஷ்டம் வந்து சேரட்டும்” என்று கத்தினால், அவ்வீட்டின் பீடைகள் ஒழியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
சேப்டர் - 9
அக்டோபர் 30
விளையாட்டாய் கிடைத்த வீராங்கனை
கேரளாவின் பையோளி கிராமத்தில் உள்ள பள்ளியின் பி.டி. ஆசிரியரான பாலகிருஷ்ணன், ஒருநாள் மைதானத்தில் உலவிக்கொண்டு இருந்தார். தூரத்தில் 4-ம் வகுப்பு மாணவிகள் சிலர் ஓடிப்பிடித்து விளையாடுவதை எதேச்சையாக அவர் பார்த்துள்ளார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த மாணவிகளில் ஒருவர், மற்றவர்களுக்கு போக்குக்காட்டி வேகமாக ஓடுவதைக் கண்டதும் அவரது கண்கள் மலர்ந்துள்ளன. மாணவியின் ஒல்லியான உடல்வாகும், ஓட்டத் திறைமையும், கண்டிப்பாக அவரை ஒருநாள் உச்சத்துக்கு கொண்டுபோகும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அடுத்த நாள் பள்ளியின் ஏற்கெனவே ஓட்ட வீராங்கனையாக திகழும் 7-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் அந்த சிறுமிக்கு ஓட்டப்பந்தயம் வைத்துள்ளார். ஆசிரியரின் கணிப்பு வீண்போகவில்லை. பந்தயத்தில் 7-ம் வகுப்பு மாணவியை 4-ம் வகுப்பு மாணவி வீழ்த்தியுள்ளார். அந்த மாணவியின் வீட்டுக்கு சென்ற ஆசிரியர், அவரது பெற்றோரை சந்தித்து, மாணவிக்கு தான் பயிற்சி அளிக்க விரும்புவதாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இதற்கு சம்மதிக்காத பெற்றோர், பின்னர் விளையாட்டின் மூலம் எதிர்காலத்தில் மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று ஆசிரியர் கூறியதால், அதற்கு சம்மதித்துள்ளனர். அப்படி பயிற்சியை தொடங்கிய மாணவிதான் இந்தியாவுக்கு 1986-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்த தங்க மங்கை பி.டி.உஷா.
1976-ம் ஆண்டில் கண்ணூரில் நடந்த ஆசிய பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி, அவருக்கு அடுத்த திருப்புமுனையை ஏற்படுத்தியது. . இப்போட்டியில் பி.டி.உஷாவின் ஆற்றலைக் கண்ட பிரபல பயிற்சியாளரான ஓ.எம்.நம்பியார், தனது பிரதம சிஷ்யையாக பி.டி.உஷாவை தத்தெடுத்துள்ளார். பி.டி.உஷாவின் ஆற்றலும், நம்பியாரின் பயிற்சியும் சேர்ந்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு பல பதக்கங்களை அள்ளிக் கொடுத்துள்ளன. ஏழ்மையில் இருந்த தன்னை, ஆசிரியர்கள் கைதூக்கி விட்டதை இன்னும் மறக்காத பி.டி.உஷா, இன்று தன்னைப் போன்ற ஏழைக் குழந்தைகள் பலருக்கு ஓட்டப் பயிற்சி அளித்து வருகிறார்.
------------------------------------------------------------------------------------
சேப்டர் -10
அக்டோபர் 31
முதல் கேப்டனின் பிறந்த நாள்
கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், யுவராஜ், தோனி என்று எத்தனையோ நட்சத்திர வீரர்களையும், கேப்டன்களையும் இந்திய கிரிக்கெட் கண்டுள்ளது. ஆனால் இந்திய அணியின் முதல் கேப்டன் என்ற பெருமைக்கு உரியவர் சி.கே.நாயுடு. இன்று (அக்டோபர் 31) அவரது பிறந்த நாள்.
1895-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பிறந்தவரான சி.கே.நாயுடு, இந்தியா சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு முன்பே கிளப் போட்டிகளில் புகழ்பெற்ற வீரராக இருந்தார். இந்த சூழலில் இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்து கிடைத்தது. 1932-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு புறப்பட்டது. முதலில் அணியின் கேப்டனாக போர்பந்தர் மகாராஜாவும், துணைக் கேப்டனாக ஞான்ஷியாம்ஜி என்பவரும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அணியின் வீரர்கள் பலருக்கும் இது பிடிக்கவில்லை. முன்னிலை ஆட்டக்காரரான சி.கே.நாயுடு கேப்டனாவதைத்தான் அவர்கள் விரும்பினர்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பே இந்த அதிருப்தியைப் பற்றித் தெரியவர போர்பந்தர் மகாராஜாவும், ஞான்ஷியாம்ஜியும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக சி.கே.நாயுடு நியமிக்கப்பட்டார். அப்போது சி.கே.நாயுடுவின் வயது 37.
No comments:
Post a Comment