பெற்றோருக்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு தேவை நல்ல நண்பர்கள். ஒரு குழந்தைக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தால், அந்த குழந்தையின் வளர்ச்சி மிக வேகமாகவும் சீராகவும் இருக்கும். தன் பெற்றோரிடம் சொல்லத் தயங்கும் விஷயத்தைக் கூட நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வர்கள் என்பதால் குழந்தைகளுக்கு நல்ல நண்பர்கள் அமைவது மிகவும் அவசியமாகிறது.
அரசுப் பணிகளில் இருக்கும் சில பெற்றோர்கள் பணி நிமித்தமாக அடிக்கடி பல்வேறு ஊர்களுக்கு மாற்றல் ஆவதுண்டு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெரியவர்களை விட அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். நன்றாகப் பழகிய நண்பர்களை விட்டுப் பிரியும் குழந்தைகள், புதிய சூழலில் நல்ல நண்பர்கள் கிடைக்காமல் திணறிப் போவார்கள். இதனால் ஏற்படும் தனிமைச் சூழலில் அவர்கள் மிகவும் சோர்ந்து விடுவார்கள். சில சமயங்களில் குழந்தைகளை நாம் புதிதாக வேறு பள்ளிக்கு மாற்றினாலும், வீட்டை வேறு இடத்துக்கு மாற்றினாலும் இதேபோன்ற சிக்கல் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு. இந்தச் சூழல் குழந்தைகளுக்கு ஏற்படாமல், அவர்களுக்கு நல்ல நண்பர்கள் துணையாகக் கிடைக்க உதவ வேண்டியது பெற்றோரின் பொறுப்பாகும். அதற்கு பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
கலகலப்பான சுற்றத்தை அமைத்துக் கொடுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டுமானால், முதலில் நீங்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் நபராக இருக்கக் கூடாது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கலகலப்பாக பழகும் நபராக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு கலகலப்பான நல்ல சுற்றம் கிடைக்கும். அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளுடன் அவர்களுக்கு நட்பு கிடைக்கும். அந்த நட்பு மேலும் வலுப்பெற, அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தால் அதை அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அப்படிச் செய்வதால் அவர்களாகவே சமாதானமாகி விடுவர்கள். சிறு சிறு சண்டைகளால் ஏற்படும் ஊடல்களுக்கு பிறகு மீண்டும் சேர்வது அவர்களின் நட்பை மேலும் இறுக்கமாக்கும். மாறாக அவர்களின் சண்டையை பெற்றோர்களுக்கு இடையிலான சண்டையாக நீங்கள் மாற்றினால் வீண் மனக்கசப்புகள்தான் ஏற்படும். குழந்தைகளுக்கும் நீங்கள் தவறான முன்னுதாரணமாக மாறி விடுவீர்கள்.
குழந்தைகளுக்கு பிடித்ததைச் செய்ய விடுங்கள்
நாட்டியம், கால்பந்து, கிரிக்கெட், ஓவியம் என்று உங்கள் குழந்தைகளுக்கு எதில் தீவிர ஆர்வம் இருக்கிறதோ, அதில் அவர்கள் தொடர்ந்து செயல்பட உதவி செய்யுங்கள். உதாரணமாக உங்கள் குழந்தைக்கு நடனத்தில் ஆர்வம் இருந்தால் வீட்டுக்கு அருகில் உள்ள நடனப்பள்ளியில் அவர்களைச் சேர்த்து விடுங்கள். இதன்மூலம் அவர்கள் சிறப்பாக நடனம் ஆட கற்றுக்கொள்வதுடன், தங்களைப் போன்று நடனத்தின் மீது விருப்பம் உள்ள மற்ற குழந்தைகளுடன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள உதவியாக இருக்கும். மேலும் ஒரே துறையில் ஆர்வமுள்ள 2 குழந்தைகள் சேரும்போது, அவர்களிடையே நல்ல நட்பும் மலரும். இதேபோன்று பல நண்பர்கள் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்
உங்கள் குழந்தைகளும் அவர்களின் நண்பர்களும் அடிக்கடி பூங்காக்கள் போன்ற பொது இடங்களுக்கு ஒன்றாக சென்று விளையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்குப் பிடித்த உணவுகளைச் செய்து பரிமாறுங்கள். மேலும் நீங்களும் அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள். இது உங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் நண்பர்களுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுவாக்கும். அவ்வாறு அழைத்துச் செல்லும்போது முடிந்தவரை குழந்தைகளை ஒரு பெரிய குழுவாக அழைத்துச் செல்லாமல் சிறிய குழுக்களாக அழைத்துச் செல்லுங்கள். அப்போதுதான் அனைவர் மீதும் உங்களால் கவனம் செலுத்த முடியும். மேலும் உங்கள் குழந்தைகளின் நண்பர்களின் இயல்பான குணத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
நண்பர்கள் நல்லவர்களா என்பதை உறுதிப்படுத்துங்கள்
நண்பர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள உங்கள் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் கொடுங்கள். அதில் எக்காரணம் கொண்டும் தலையிடாதீர்கள். ஒரு சில நண்பர்கள் விஷயத்தில், அவர்கள் நல்லவர்கள்தானா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், அவர்களை அழைத்துப் பேசுங்கள். உங்கள் குழந்தை பழகுவதற்கு அவர்கள் ஏற்ற நபர்கள்தானா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் சரியான நபராக தோன்றாவிட்டால் அதைப்பற்றி மெதுவாக உங்கள் குழந்தைக்கு எடுத்துக் கூறி அந்த நட்பில் இருந்து வெளியே வருமாறு அறிவுறுத்துங்கள்.
நண்பர்களும் கட்டிடங்களில் உள்ள லிஃப்ட்களும் ஒன்று என்பதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிவையுங்கள். ஒரு லிஃப்ட் எப்படி அதில் ஏறுபவர்கள் உயரத்துக்கு செல்ல உதவுகிறதோ, அதேபோல ஒரு நல்ல நண்பரின் நட்பு, உங்கள் வாழ்க்கைப் பயணம் மேலே ஏறுவதற்கு வழிசெய்யும். அதே நேரத்தில் அந்த லிஃப்ட், அதில் ஏறுபவர்களை எப்படி வேகமாக உயரத்தில் இருந்து கீழே கொண்டுவருமோ, அதேபோல் தீயவர்களின் நட்பு, அவர்களை அதல பாதாளத்துக்கு இட்டுச் செல்லும். இதைப்பற்றி உங்கள் குழந்தையிடம் அடிக்கடி விளக்கிக் கூறுங்கள். எந்த கட்டத்திலாவது தங்கள் நண்பர்கள் சரியில்லாதவர்கள் என்று தோன்றினால், உடனடியாக அந்த நட்பை துண்டித்துக் கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்துங்கள்.
நண்பர்களுக்குள் பிரச்சினை வந்தால்...
உங்கள் குழந்தை தேர்ந்தெடுத்துள்ள நண்பர்கள் சரியானவர்கள்தான் என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டால், பின்னர் அவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். தங்கள் நண்பர்களுடன் ஏதாவது பிரச்சினை என்று உங்கள் குழந்தைகள் சொன்னால், அந்தப் பிரச்சினை என்ன என்பதை காது கொடுத்துக் கேளுங்கள் . அது சிறிய பிரச்சினையென்றால் அதை எப்படி அவர்களுக்குள் தீர்த்துக் கொள்வது என்று ஆலோசனை வழங்குங்கள். ஆனால் எந்த கட்டத்திலும் இதில் நீங்கள் நேரடியாக தலையிடாதீர்கள்.
“உனக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவையோ, அப்படிப்பட்ட நண்பனாக மற்றவர்களுக்கு நீயும் இருக்க வேண்டும்” என்பதை உங்கள் குழந்தையின் மனதில் பதியவையுங்கள். ஒரு நல்ல நண்பனுக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள். இதனால் அவர்களைத் தேடி நிறைய நண்பர்கள் வரும் வாய்ப்பு ஏற்படும்.
No comments:
Post a Comment