குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். அவர்களின் எந்த செயல்பாடுகளும் பெரியவர்களை விட வேகமானதாக இருக்கும். இதனாலேயே பெரியவர்களை விட அதிகமாக கீழே விழுவது, தீப்புண் படுவது, ஷாக் அடிப்பது என்று பல ஆபத்துகளில் அவர்கள் அடிக்கடி சிக்கிக் கொள்கிறார்கள். இவற்றில் இருந்து குழந்தைகளை காப்பதில் பெற்றோருக்கு பெரும் பங்கு உள்ளது. அந்த வகையில் குழந்தைகளை ஆபத்துகளில் இருந்து காக்க அவர்கள் செய்யவேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்:
குழந்தைகளை தனியாக விடாதீர்கள்
பெரியவர்களே நடக்கும்போது தெரியாமல் அடிக்கடி தடுக்கி விழும்போது, குழந்தைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. குறிப்பாக 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கீழே விழுதால் அதிக காயங்கள் ஏற்படும். இந்த காயங்களில் இருந்து குழந்தைகளைப் காப்பது பெற்றோர்களுக்கு மிகவும் கடினமான விஷயம்.
கீழே விழுந்து குழந்தைகள் அடிபடாமல் இருக்க, முடிந்தவரை 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை படுக்கை, டைனிங் டேபிள், ஊஞ்சல், நாற்காலிகள் போன்ற இடங்களில் தனியாக விட்டுச் செல்ல கூடாது. யாரவது ஒருவரின் கண்காணிப்பிலேயே குழந்தை எப்போதும் இருக்க வேண்டும். அதிலும் அப்படி உயரமான இடத்தில் இருக்கும்போது அவர்களின் வாயில் ஸ்பூன், பேனா, பொம்மை போன்ற கடினமான பொருட்கள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் குழந்தைகள் கீழே விழும்போது அவற்றின் வாயில் மேலும் அதிக காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஜன்னல்கள், மாடிப் படிகள் ஆகியவற்றைப் பார்த்தாலே குழந்தைகளுக்கு தனி உற்சாகம் பிறக்கும். அவற்றின் மீது ஏறி தங்கள் திறமையை வெளிப்படுத்த நினைக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குழந்தைகள் கீழே விழுந்து காயம் அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே மாடிப்படிகளில் குழந்தைகள் ஏறாமல் தடுக்கும் விதமாக அவர்கள் உயரத்துக்கு ஒரு சிறு கதவை அமைத்து விடுவது நல்லது. இந்த தடுப்பு கதவுகளை மீறி குழந்தைகளால் மேலே ஏற முடியாது என்பதால், அவை கீழே விழும் வாய்ப்புகள் குறையும். அதேபோல் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், அவர்கள் ஜன்னல் கம்பிகளில் ஏறாமல் தடுக்கும் விதமாக அவற்றில் வலைகளைப் பொருத்துவது நல்லது.
வாக்கர்கள் வேண்டாம்
இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் நடைபயில்வதற்காக வாக்கர்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த வாக்கர்கள், ஏதாவது பொருட்களில் தடுக்கி கீழே விழுந்தால் குழந்தைகளுக்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. எனவே வாக்கர்களைத் தவிர்த்து, நம் ஊரில் முன்பு பயன்படுத்தப்பட்ட நடை வண்டிகளையே பயன்படுத்துவது நல்லது. மேலும் குழந்தைகள் உள்ள வீட்டில் தரையில் எண்ணெய் போன்ற பொருட்கள் சிந்தினால் அவற்றை உடனடியாக துடைத்துவிட வேண்டும். குளியலறைகளிலும் வழுக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை முடிந்தவரை தனியாக பாத்ரூமுக்குள் அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைகள் கீழே விழுந்து அடிபடுவதில் இருந்து ஓரளவு அவர்களைக் காக்க முடியும்.
குழந்தைகள் இருக்கும் வீடுகளில் உள்ள மேஜைகள், நாற்காலிகள், டீபாய்கள் போன்றவை கூர்முனையுடன் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் குழந்தைகள் கீழே விழும்போது அந்த முனைகளில் பட்டு அதிகம் அடிபட வாய்ப்புகள் உள்ளன.
தீப்புண்களில் இருந்து காக்க
கீழே விழுந்து அடிபடுவதற்கு அடுத்தபடியாக தீக்காயங்களால்தான் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து ஏற்படுகிறது. சூடான பாத்திரங்கள், அயர்ன் பாக்ஸ், வெந்நீர், சூடான உணவுப் பொருட்கள் போன்ற பல்வேறு விஷயங்களால் குழந்தைகளுக்கு தீப்புண்கள் ஏற்படுகின்றன. பெற்றோர்கள் கவனமாக இருந்தால், குழந்தைகளை தீப்புண்களில் இருந்து பெருமளவில் காக்கலாம்.
இதற்கு முதலாவதாக குழந்தைகளையும், சூடான பொருட்களையும் ஒரே நேரத்தில் கையாள்வதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். சூடான பொருட்களை கையாளும்போது குழந்தைகள் அருகில் இல்லாமல் இருப்பதை பெற்றோர் உறுதி செய்துகொள்ள வேண்டும். அடுப்பில் பொருட்களை வைத்திருக்கும் நேரத்தில் சிறு குழந்தைகள் சமையலறைக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும். சமைக்கும்போது சமையலறைக்கும் வீட்டு ஹாலுக்கும் இடையிலான கதவை மூடி வைத்திருப்பது நல்லது. வீட்டில் அனைவரும் சாப்பிடுவதற்காக சூடான உணவுப் பொருட்களை டைனிங் டேபிளில் வைத்தால் குழந்தைகள் அதைத் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை சூடான பொருட்களுக்கு அருகில் குழந்தைகள் தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளை குளிக்க வைக்கும்போது ஒரு பக்கெட்டில் குளிர்ந்த நீரையும், சூடான நீரையும் கலந்து பெரும்பாலான பெற்றோர்கள் ஊற்றுவர்கள். அப்படிச் செய்யும்போது முதலில் சூடானை நீரை பக்கெட்டில் ஊற்றினால், குழந்தைகள் அதைக் கவிழ்த்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பக்கெட்டில் முதலில் குளிர்ந்த நீரை ஊற்றி, அதன்பிறகு சூடான நீரை ஊற்ற வேண்டும்.
தப்பித்தவறி தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக தரையில் உருண்டு தீயை எப்படி அணைப்பது எப்படி என்பதை குழந்தைகளுக்கு விளையாட்டுப் போக்கில் கற்றுக்கொடுக்க வேண்டும்.
கொசுவிரட்டிகள் ஜாக்கிரதை
கொடிய விஷங்களால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க, கொசு விரட்டிகள், குளியலறையை சுத்தம் செய்யும் அமிலங்கள் போன்றவற்றை அவர்களுக்கு எட்டாத இடங்களில் வைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் உணவுப் பொருட்களை வைக்கும் இடங்களில் அவற்றை வைக்கக்கூடாது. அப்படி உயரங்களில் வைத்தாலும் குழந்தைகளால் திறக்க முடியாதபடி அவற்றை இறுக்கமாக மூடிவைக்க வேண்டும்.
உடல்நலமில்லாத காலகட்டத்தில் மருத்துவர்கள் எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு மருந்தைக் கொடுக்கச் சொல்கிறார்களோ, அந்த அளவுக்குத்தான் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் வெளிச்சமான இடத்தில் இருந்துகொண்டு, சரியான அளவு மருந்தைத்தான் எடுத்துள்ளோமோ என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு, அதன் பிறகே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இருட்டில் இருந்துகொண்டு மருந்தை எடுப்பதால் அளவு கூடிப்போகும் அபாயம் உள்ளது. குழந்தைகளுக்கான சாக்லேட்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வாங்கும்போது அதன் காலாவதி தேதியை ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்த பிறகே வாங்க வேண்டும்.
மின்சாரம் ஜாக்கிரதை
குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, முடிந்தவரை பிளக் பாயிண்ட்களை அவர்களுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். அவை கீழே இருக்கும் பட்சத்தில் தேவையில்லாத நேரங்களில் அவற்றை மூடி வைத்திருக்க வேண்டும். மின்சார ஸ்விட்ச்களுக்கு அருகில் தண்ணீரோ, இரும்புப் பொருட்களோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment